ஹலோ சித்ரகுப்தன் 1,2,3
By Rajineel Neelakant
சித்ரகுப்தா! இந்தக் கிழவர் அவர்பாட்டுக்கு சொர்க்கத்துக்கு போகும் பாதையில் நடந்து கொண்டிருக்கிறார். நீயும் பார்த்தும் பாராதது போல் உட்கார்ந்திருக்கிறாய்? என்ன நடக்கிறது இங்கே? எனக்குத் தெரிந்து சொர்க்கம் போகும் அளவு இந்தக் கிழவர் நல்ல காரியம் ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. எங்கே, உன் கணக்கு ஓலையைக் கொடு...
“ஐயனே தர்மராஜரே ! இவர் சாகும் தருவாயில் சங்கரா! சங்கரா ! என்றார்”
ஓஹோ ! என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்?, அஜாமிளன் கதையைப்போல சொல்லி இனி என்னை ஏமாற்ற முடியாது. அவருக்கு வாய் குளறி வெகுநாட்களாகி இருந்தது எனக்குத் தெரியும். அவருக்கு சங்கரன் என்ற பெயரில் பிள்ளைகள் யாரும் இல்லை என்றும் தெரியும்.
அதில்லை ஐயனே! அவர் மனதில் சங்கரா என்று...
ஹை ! இவர் மனதில் சங்கரா என்றாரா? நல்ல கதை. இவர் ஒரு நாளும் பிறை சூடிய பெருமானை மனதாலும் நினைத்ததில்லை. அவர் மனம் பணத்தில் மட்டுமே இருந்தது.
உன் ஓலையைக் கொடு முதலில்.
இல்லை ஐயனே அண்ணாமலையானுக்கு அரோஹரா என்ற கோஷம் இவர் காதில் சாகும் தருவாயில் விழுந்தது. அதனால்தான்...
அட அட அட என்ன ஒரு கற்பனை சித்ரகுப்தா!
அவருக்கு காது டமாரச் செவிடாகி இருபது வருடமாகி விட்ட கதையும் தெரியும். விட்டால், ச்லேட்டில் எழுதிக் காண்பித்தார் என்பாய். அவருக்கு ஒரு வருஷமாக பாரிச வாயு அதுவும் தெரியும்.
ஐயனே. நிஜமாகவே அவர்வீட்டுப் பக்கத்துக் கோயிலில் இருந்து வந்த ஸ்பீக்கர் அலறலில் அவரின் டமாரச்செவிடு காதிலும் விழும்படி, நமச்சிவாய ..நமச்சிவாய ..ஓம் நமச்சிவாய ..என்ற பாட்டு ஒலித்த க்ஷணத்தில்தான் உயிர் பிரிந்தது.
ஆகையால் அவர் சொர்க்கம் மட்டுமில்லை கைலாசப்ராப்தியே உண்டு.
ஐயா பெரியவரே நீங்கள் இதோ இந்த கைலாசம் போகும் வழியில் செல்லுங்கள்.
சித்ரகுப்தா! உன்னை பூலோகம் சென்று எல்லா மைக் செட்டுக்களையும் செயலிழக்கச் செய்த பின்தான் யம லோகம் திரும்ப வேண்டுமென ஆணையிடுகிறேன்.
ஐயனே இது என்ன ஆணை?! அப்படியென்றால் நான் திரும்ப வர முடியவே முடியாதே!
வேறு சித்ரகுப்தனை வேலைக்குச் சேர்த்தாயிற்று. நீ போகலாம்.
“ஹலோ ஹலோ மைக் டெஸ்டிங் 1,2,3... வால்யூம் கொஞ்சம் கம்மி பண்ணுப்பா! டமாரச் செவிடு காதுல எல்லாம் விழாத மாதிரி” என்று உங்கள் வீட்டருகில் ஸ்பீக்கரில் கேட்டால் அந்தக் குரல் பழைய சித்ரகுப்தனுடையதுதான். 😀
By Rajeswari neelakantan
No comments:
Post a Comment